Skip to main content

“வெளிநாட்டு பண முறைகேடுகள் தடுக்கப்படும்..” - திருச்சி விமானநிலைய இயக்குநர்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

“Foreign currency fraud will be prevented..” - Trichy Airport Director

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய இயக்குநராக சுப்பிரமணி கடந்த 22ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

அப்போது அவர், “திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த 2023ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். தற்பொழுது 60% வேலைகள் முடிவடைந்துள்ளது. கட்டுமான பணிகளை இன்னும் விரைவாக செய்ய கூடுதலாக பணியாட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

கொரோனாவிற்குப் பின்பு விமான சேவையில் கொரோனாவிற்கு முன்பிருந்த நிலையை அடைய அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம். 90% கொரோனாவிற்கு முன்பு இருந்த நிலையில் விமான சேவை தற்போது இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலைய ஓடுபாதையின் பக்கவாட்டில் 6000 அடிக்கு புதிய ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு விமான போக்குவரத்து இருக்கும் விமான நிலையங்களில் மட்டுமே இந்த முறை செயல்பாட்டில் இருக்கும் அந்த வகையில் தற்பொழுது திருச்சி விமான நிலையத்தில் இந்த விமான நிலைய ஓடுபாதைக்கு பக்கவாட்டில் ஒரு ஓடுபாதையை அமைத்துள்ளோம். அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.

 

இன்னும் சில நாளில் அது பயன்பாட்டிற்கு வரும். ஒரே நேரத்தில் ஓடுபாதையில் அடுத்தடுத்து விமானங்கள் வரும்பொழுது அந்தப் பாதையில் ஏற்கனவே தரையிறங்கிய விமானங்களை பக்கவாட்டில் இருக்கும் ஓடுபாதையில் நிறுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான நிலைய ஓடுபாதையில் ஈடுபடும் போக்குவரத்து பிரச்சனையை சரி செய்ய முடியும். வெளிநாட்டு கரன்சிகளை இந்திய ரூபாயாக விமான நிலையத்தில் கள்ளமுறையில் சிலர் மாற்றி வருவதாக தகவல் வந்துள்ளது. கள்ளமுறையில் பண பரிமாற்றத்தை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்