திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலை உள்ளது. இந்தப் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர், நேற்று இரவு காவிச் சாயம் பூசிவிட்டுத் தலைமறைவாகி விட்டனர்.
இந்த விஷயம் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் காதுக்கு எட்டவே, கட்சிப் பொறுப்பாளர்கள் சிலருடன் இரவோடு இரவாக ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள சமத்துவபுரத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். உடனே, காவிச் சாயத்தைச் சுத்தப்படுத்தி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின், பத்திரிகையாளர்களிடம் ஐ.பி.செந்தில்குமார் பேசும்போது, தமிழகத்தில் தொடர்ந்து பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுவதும், காவி பூசப்படுவதும் நடந்து கொண்டே இருப்பது கண்டிக்கத்தக்கது. தற்போது தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு, பெயரில் மட்டுமே திராவிடத்தை, சுயமாரியாதையை வைத்துக்கொண்டு மத்தியல் இருக்கக் கூடிய அரசுக்கு ஒட்டு மொத்தமாகத் தலையாட்டுகிற அரசாக இருந்து வருகிறது.
ஒரு இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து இருக்கலாம். அதேபோல் இந்தப் பிரச்சனை எங்கே முதலில் தொடங்கியதோ அங்கே தவறு செய்த குற்றவாளிக்குச் சரியான தண்டனை வழங்கப்பட்டு இருந்திருந்தால் இது போன்ற சம்பவத்தை தடுத்து இருக்கலாம்.
பா.ஜ.கவைச் சேர்ந்த சிலர், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வெளிப்படையாகவே பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதைக் கண்டிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய பெரியாரின் சிலை மீது காவிச் சாயம் பூசியுள்ள அடையாளம் தெரியாத நபர்கள் நாளை அடையாளம் காணப்படுவர்.
அதேநேரம், இதைச் செய்தது யார்? என்று அனைவருக்கும் தெரியும். காலம் இப்படியே போய்விட முடியாது. இந்தச் செயல் மீண்டும் தொடர்ந்தால் இதற்குக் காலம் நிச்சயம் ஒருநாள் பதில் சொல்லும். காவிச் சாயத்தைப் பூசினால் மட்டும் பெரியாரின் கொள்கைகள் மாறிவிடுமா? இனி இதுபோன்ற சம்பவங்களை தமிழக அரசு, காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று கூறினார்.