
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பேருந்துநிலையம், பூ மார்க்கெட், பழைய அரசு மருத்துவமனை எதிரில் என 200க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான வாடகை 500 மடங்கு ஏற்றப்பட்டுள்ளது. இந்த வாடகையை உடனடியாக கட்ட வேண்டும் என நகராட்சி சார்பில் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுபற்றி திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலைய நகராட்சி கடைகள் மற்றும் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தினர் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ எ.வ.வேலுவை சந்தித்து, வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்மென மனு தந்துள்ளனர்.
அது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., 2017 மார்ச் மாதம் நகராட்சி ஆணையரிடமிருந்து நகராட்சி கடைகளுக்கான வாடகையை 500 சதவிதம் முதல் 1000 சதவிதம் வரை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதனை 2016 ஜீலை மாதம் என முன்தேதியிட்டு கணக்கிட்டு செலுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அதாவது, 80 சதுரஅடியுள்ள கடைக்கு 1746 ரூபாய் என்றால் வாடகை உயர்த்தப்பட்டப்பின் அதே கடைக்கு 10,067 ஆக நிர்ணயித்துள்ளது. அதோடு முன் தேதியிட்டு ஆணைப்பிறப்பித்துள்ளதால் அதே கடை நிலுவை தொகையாக 1,20,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்த வாடகை உயர்வு சரியானதல்ல, மாற்றியமையுங்கள் என தீர்ப்பளிக்கப்பட்டும், அதை நடைமுறைப்படுத்தாமல் உயர்த்தப்பட்ட வாடகையையே கேட்கின்றனர்.
நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையின் நில வழிக்காட்டி மதிப்பின்படி தான் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். திருவண்ணாமலையில் முக்கிய வீதியான மத்தளாங்குளத் தெருவிலேயே அரசு வழிக்காட்டி மதிப்பு 4500 தான். பேருந்து நிலையத்தில் அரசு வழிக்காட்டி மதிப்பு 12 ஆயிரம் என்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள். ஆனால் புதிய பேருந்து நிலைய பகுதியில் அரசு வழிக்காட்டி மதிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்கிறது தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி வாங்கிய தகவல். தனியார் வாங்கும் வாடகையை விட அதிக வாடகையை திருவண்ணாமலை நகராட்சி வசூலிக்க முயல்கிறது. தமிழகத்தில் இதுப்போன்று வேறு எந்த நகராட்சியும் செய்யவில்லை.
உள்ளாட்சி தேர்தல் நடத்தி கவுன்சிலர்கள், சேர்மன்கள் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. செயல்படாத இந்த எடப்பாடி அரசு சரியாக செயல்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்ததால் மத்திய அரசு வழங்க வேண்டிய 3600 கோடி ரூபாயை இப்போது வரை வழங்கவில்லை. இதனால் நிதி ஆதாரத்தை பெருக்க மக்களிடம் வரி என்கிற பெயரில் கொள்ளையடிக்க முயல்கிறது உள்ளாட்சித்துறை.
இந்த வாடகையை சரியான வாடகையாக குறைத்து அதிகாரிகள் நிர்ணயிக்காவிட்டால் திமுக சார்பில் நகராட்சி அலுவலகத்தின் முன் மக்களை திரட்டி திமுக சார்பில் பெரும் போராட்டம் நடைபெறும் என்றார்.