நாங்குநேரி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி சமீபமாக உள்ள அம்பலம் கிராமத்தின் டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள வீட்டிலிருந்த சிலர் வோட்டுக்குப் பணம் கொடுப்பதாக வந்தவர்கள் என்று கிராமத்தின் சிலர் அவர்களையும் அவர்கள் வைத்திருந்த பணத்தோடு மடக்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க, பறக்கும் படை அதிகாரிகள் அங்கு விரைந்ததாக நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இது குறித்து நாம் காங்கிரசின் தலைமை பூத் ஏஜெண்ட்டும் தி.மு.க.வின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆவுடையப்பனிடம் கேட்ட போது,
அந்த வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ளது. அதில் கூட்டணியின் தேர்தல் பணிக்காக பெரியகுளம் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வான சரவணக்குமாருடன் கட்சியினர் 10 பேர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் தங்களின் செலவிற்காகப் பணம் வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் அந்தக் கிராமத்தின் எந்த ஒரு வாக்காளரையோ, அல்லது அவர்கள் வீட்டுக்கோ சென்று வாக்குக்காகப் பணம் கொடுக்கவில்லை. அப்படி அவர்கள் கொடுக்கும் போது கையோடு பிடித்திருந்தால் சரி. அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. திடீரென்று அவர்கள் இருந்த வீட்டிற்குள் வந்த சிலர் திமுக ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவையும் மற்றும் ஒருவரையும் தாக்கியுள்ளனர். அதில் அவர்களுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரிடமும் இருந்த மொத்தப் பணத்தையும் கைப்பற்றி அப்படி அந்த மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
விசாரணைக்காக வந்த பறக்கும் படை மற்றும் ஐ.டி. அதிகாரிகளிடம் 10 பேர்களும் நடந்தவைகளைச் சொல்லியுள்ளனர். அதன் பின் அதிகாரிகள் அவர்களிடமிருந்த 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயையும் கைப்பற்றி முறைப்படி கணக்கு தெரிவிக்கச் சொல்லிப் போய் விட்டனர். மேலும் தாக்குதலில் இருவர் காயமடைந்ததால் முறைப்படி சுடலைக்கண்ணு போலீசில் புகார் செய்து விட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள் என்றார்.