சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் ஏழாம் தளத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு காட்சிக்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப இன்று துவக்கி வைத்தார்.
சாலையில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், சாலைகளில் இடம் பெற்றுள்ள கோடுகள், போக்குவரத்து சமிக்கைகள் பற்றிய விளக்கங்கள் மற்றும் சாலைகளில் இடம் பெற்றுள்ள சாலை பாதுகாப்பு உபகரணங்கள், அதன் பயன்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள் ஆகியவை இந்தக் காட்சிக்கூடத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தக் காட்சிக்கூடத்தின் சிறப்பு அம்சமாக, ரோடியோ எனும் ரோபோட் இடம் பெற்றுள்ளது. இது குழந்தைகளை கவரும் விதமாகவும், அவர்களுக்கு எளிதில் சாலை பாதுகாப்பு பற்றி புரிதல் ஏற்படுத்தக் கூடிய வகையிலும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கிக் கூறும் வகையிலும் இந்த ரோபோட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட்டை S.P.Robotic works நிறுவனத்தில் பயிலும் பள்ளி குழந்தைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.