
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 4 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு காலமாக, வெற்றி பெற்றவர்களின் ஆட்சிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.