Skip to main content

என்ஃபீல்டு, யமஹா தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்! ராமதாஸ்

Published on 30/09/2018 | Edited on 30/09/2018
Enfield, Yamaha workers must resolve the fight

 


என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருவது  தமிழக அரசு. மக்களின் வரிப்பணத்தில் சலுகைகளை அனுபவிக்கும் இந்த ஆலைகள் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடும் போது அதை கண்டித்து திருத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு தான் உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னையை அடுத்த திருப்பெரும்புதூர் தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட 5 மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்  கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்,   அதற்கு தீர்வு காண வேண்டிய அரசு, நிர்வாகங்களுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
 

திருப்பெரும்புதூரில் உள்ள என்ஃபீல்டு மோட்டார் வாகன ஆலையில் 480 நாட்களுக்கும் கூடுதலாக பணியாற்றிய 120 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய மறுத்த நிர்வாகம், அவர்களை பணி நீக்கம் செய்துள்ளது. தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்காக தொழிற்சங்கம் அமைத்ததற்காக நிரந்தரத் தொழிலாளர்கள் இருவர் பணி நீக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து திருப்பெரும்புதூர் ஆலையில் 3500 தொழிலாளர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் தொழிற்சாலையில் 2700 ஊழியர்கள் என மொத்தம் 6200 பேர் கடந்த 24-ஆம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

அதேபோல், ஓரகடத்தில் உள்ள யமஹா ஆலையிலும் இதே போன்ற அடக்குமுறைகளைக் கண்டித்து  600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்கு அருகில், செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மயோங் சின் ஆட்டோமோடிவ் தொழிற்சாலையில் கடந்த 25 நாட்களாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். பூவிருந்தவல்லி பகுதியில் செயல்பட்டு வரும் ஹனிவெல், டோங்சான் ஆகிய இரு நிறுவனங்கள் நிரந்தரப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் நோக்குடன் தொழிற்சாலைகளை மூடிவிட்டன. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

என்ஃபீல்டு உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் நடைபெறும் போராட்டங்களுக்கும், சில ஆலைகள் மூடப்பட்டதற்கும் அடிப்படைக் காரணம் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் தான். அனைத்து தனியார் பெரு நிறுவன நிர்வாகங்களுமே நிரந்தர பணியாளர்களை அமர்த்தவோ, குறிப்பிட்ட காலம் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்யவோ தயாராக இல்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி சக்கையாக்கிய பின் எந்த பயனும் அளிக்காமல் தூக்கி எறிகின்றனர். பல நிறுவனங்களில் ஊதிய உயர்வு கூட வழங்குவதில்லை. இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது பணி நீக்கம், பழிவாங்கல் உள்ளிட்ட அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.
 

ஹனிவெல், டோங்சான் போன்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் வேறு விதமானவை. அந்நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் நிரந்தர ஊழியகளுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களின்படி அதிக ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கத் தயாராக இல்லை. நிறுவனத்தை சில மாதங்கள் மூடி வைத்தால் நிரந்தரப் பணியாளர்களை நீக்கி விட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை மட்டும் அடிமைகளைப் போன்று வைத்துக் கொண்டு குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பை சுரண்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் அந்த நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடி வைத்திருக்கின்றன.
 

திருப்பெரும்புதூர் மண்டலத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைப்பது இருக்கட்டும்.... கோரிக்கைகளைக் கேட்கக் கூட பினாமி அரசு தயாராக இல்லை. 1991-ஆம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும்  முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றப்ப்பட்டு விட்டதால், நீதிமன்றங்களும், தொழிலாளர் நல அமைப்புகளும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. என்ஃபீல்டு பிரச்சினை குறித்து விசாரித்த தொழிலாளர் நல இணை ஆணையர், தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல், அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். யமஹா வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமோ, ஆலைக்கு 200 மீட்டருக்கு அப்பால் சென்று போராட்டம் நடத்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
 

என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருவது  தமிழக அரசு. மக்களின் வரிப்பணத்தில் சலுகைகளை அனுபவிக்கும் இந்த ஆலைகள் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடும் போது அதை கண்டித்து திருத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் அனைத்துப் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்