சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக பாமகவைச் சேர்ந்த ரேவதியும், துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரனும் வெற்றி பெற்றனர்.
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 29 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ம் தேதி வெளியானது. இதில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக 4, தேமுதிக 1 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எஞ்சியுள்ள 6 இடங்களையும் திமுக கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் சனிக்கிழமை (ஜன. 11) நடந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் மறைமுகத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடந்தது. உறுப்பினர்களே வாக்களித்து தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நடக்கும் கட்டடத்திற்குள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவியாளர்கள், வாக்களிக்கும் ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தவிர பத்திரிகையாளர்கள் உள்பட பிறர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உறுப்பினர்கள், தேர்தல் வெற்றிச்சான்றிதழை மட்டுமே உடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
காலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் தாரமங்கலம், கொளத்தூர் ஆகிய 2 ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் நேற்று திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற 18 ஒன்றியங்களிலும் ஆளும் அதிமுகவே தலைவர் பதவிகைளைக் கைப்பற்றியது. கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலைவர் பதவியை அதிமுக விட்டுக்கொடுக்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியை கூட்டணியில் உள்ள பாமகவுக்கு, ஆளுங்கட்சி விட்டுக்கொடுத்தது. அதையடுத்து, தலைவர் பதவிக்கு பாமக சார்பில் 3வது வார்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் ரேவதி, திமுக சார்பில் ஆத்தூர் 26வது வார்டில் வெற்றி பெற்ற நல்லம்மாள் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். மாவட்ட ஆட்சியர் ராமன் முன்னிலையில் தேர்தல் நடந்தது.
மொத்தம் உள்ள 29 உறுப்பினர்களில் அதிமுகவைச் சேர்ந்த சின்னுசாமி (11வது வார்டு), ராஜா (29வது வார்டு), திமுகவைச் சேர்ந்த அழகிரி (9வது வார்டு) ஆகியோர் மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. சொந்தக் காரணங்களால் அவர்கள் மறைமுகத் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மொத்தம் 26 உறுப்பினர்கள் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இதில், பாமக ரேவதிக்கு 22 வாக்குகளும், திமுகவின் நல்லம்மாளுக்கு 4 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ரேவதி, 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக தரப்பில் இருந்தும் ஒரு வாக்கு, ரேவதிக்கு பதிவாகி இருந்தது.
இதையடுத்து, சனிக்கிழமை மாலை துணைத்தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் கொங்கணாபுரம் ஒன்றியம் 12வது வார்டில் வெற்றி பெற்ற ராஜேந்திரன், திமுக சார்பில் 19வது வார்டில் வெற்றி பெற்ற கீதா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில், ராஜேந்திரன் 22 வாக்குகள் பெற்று துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுகவின் கீதாவுக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக வெற்றி பெற்ற ரேவதிக்கு, அதிமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தலைவராக வெற்றி பெற்ற பிறகு ரேவதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், தலைவராக போட்டியிட வாய்ப்பளித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி,'' என்றார்.
தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தபோது, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவின் கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. அந்த தேர்தலில், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியை பாமகவுக்கு விட்டுக்கொடுத்தது திமுக. அப்போது பாமக சார்பில் சண்முகம் தலைவராகவும், திமுகவின் சுரேஷ்குமார் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த முறை, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தபோதும் இரண்டாவது முறையாக மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியை பாமகவே கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 2006க்குப் பிறகு 2020ல் மீண்டும் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிக்கு வந்திருக்கிறது பாமக.