தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட படைப்பிரிவினருக்கும் மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.
குடியரசு தின விழா ஒவ்வொரு வருடமும் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள், தென்னக பண்பாட்டு மையம், செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகியவற்றின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்நிலையில் இவ்வாண்டு முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளும் படைப்பிரிவினர்களுள் சிறப்பாக செயல்படும் படைப்பிரிவினர்களுக்கு பரிசுகள் வழங்கிட முடிவு செய்யப்பட்டு அதன்படி சிறப்பாக செயல்பட்ட இராணுவப்படைப் பிரிவின் சார்பில் தலைவர் கேப்டன் யாஷ் தாதல், மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவின் சார்பில் உதவி கமாண்டன்ட் மனோஜ் கே.ஆர். பான்டே, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப் பிரிவின் சார்பில் ஆய்வாளர் வி. சுரேஷ்குமார், தேசிய மாணவர் படையின் (ஆண்கள்) சார்பில் தலைவர் என். திலிப் மற்றும் சிற்பி பெண்கள் படைப் பிரிவின் சார்பில் தலைவர் எஸ். மதினா, இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த விமானப்படையின் குரூப் கேப்டன் மஞ்சு பாண்டே மற்றும் குரூப் கேப்டன் முகேஷ் பரத்வாஜ் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.