தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற நடைபயணத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காவல் சீருடையில் இருந்துகொண்டே பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளானது.
இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி தஞ்சை சரக டிஐஜிக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து, தஞ்சை சரக டிஐஜி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினத்தில் நடந்த என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டதாகக் கூறி, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக காவல்துறை. குறிப்பிட்ட தினத்தன்று, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவரும், அந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரும் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து விட்டார்கள் என்ற தவறான தகவலை அந்தப் பகுதியில் இருந்து பிறர் பரப்பியதன் அடிப்படையில், இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக நான் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில், காவல்துறையினர் விசாரிப்பது என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், அதற்காக, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்களை, எந்த விசாரணையும் இன்றி பணியிடை நீக்கம் செய்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இரு உதவி ஆய்வாளர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினரையும், அவர்களைச் சார்ந்தவர்கள் அனைவரையுமே இந்த நடவடிக்கை பாதிக்கும். பல கனவுகளோடு சீருடை அணிந்து, இத்தனை ஆண்டுகளாகத் தங்கள் கடமையில் சிறிதும் தவறாது பொதுமக்களுக்காக உழைத்தவர்களுக்குக் கிடைக்கும் பரிசு, பணியிடை நீக்கம் என்றால், இளைஞர்கள் நாளை காவல்துறை பணியில் சேர எப்படி முன்வருவார்கள். காவல்துறை சகோதரர்கள் மீதான இது போன்ற கடுமையான நடவடிக்கைகள், இளைஞர்களிடயே காவல்துறைப் பணிக்கான வேட்கையை அற்று விடும்.
பல ஆண்டுகளாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த தங்கள் பணிகளைத் திறம்படச் செய்து கொண்டிருக்கும் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மீதான இந்த பணியிடை நீக்க நடவடிக்கை மிக அதிகபட்சமானது என்பதால் தஞ்சை சரக மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், தயவு செய்து இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.