கரோனா நோயாளிகளுக்கான ரெமடிசிவிர் மருந்து விற்பனை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்றுமுதல் (மே 8) தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 26,465 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 197 பேர் பலியாகி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை (மே 7) ஒரே நாளில் 648 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்நோய் பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கமான பாரசிட்டமல் மருந்துகளுடன், ரெம்டிசிவிர் மருந்துகளும் தரப்படுகிறது. ரெம்டிசிவிர் மருந்துகள் 70 சதவீதம் வரை நோய்த்தொற்றில் இருந்து குணமாக உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும், இது உயிர்க்காக்கும் மருந்துப் பட்டியலில் இல்லை.
தமிழகத்தில் ரெம்டிசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ஓரளவு கையிருப்பு உள்ளது. இந்நிலையில், சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இன்றுமுதல் (மே 8) ரெமடிசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 6 பாட்டில் கொண்ட ஒரு பேக்கேஜ் 9,500 ரூபாய்க்கு கிடைக்கும். தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் நேரடியாக விற்பனை செய்கிறது.
ரெம்டிசிவிர் மருந்தை வாங்கச் செல்பவர்கள் மருத்துவரின் பரிந்துரை கடிதம், வாங்கச் செல்பவரின் ஆதார் எண், பாதிக்கப்பட்டவரின் ஆதார் எண், நோயாளியின் கரோனா பரிசோதனை மற்றும் சி.டி. ஸ்கேன் முடிவுகளின் நகல்களும் கொடுக்க வேண்டும். இவற்றில் எந்த ஓர் ஆவணம் இல்லாவிட்டாலும் ரெம்டிசிவிர் மருந்து வழங்கப்படாது.
கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதையும், அத்தியாவசியம் இல்லாதவர்களும் ரெம்டிசிவிர் மருந்தை வாங்கி வீணடித்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.