இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையால் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை மிகமோசமாக இருந்துவருகிறது. பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவிவருகிறது. அதேபோல், சிலகாலம் முன்வரை ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்படும் நிலை இருந்துவந்தது. ஆனால், தற்போது தமிழக அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தன்னார்வல அமைப்புகளும், நபர்களும் மருத்துவ உதவிகளைச் செய்துவருகின்றனர்.
அந்தவகையில், சிதம்பரம் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை சார்பில் அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவிட் -19 சிகிச்சைக்காக ரூ 1.5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. சிதம்பரம் ரெட்கிராஸ் தலைவரான மதுபாலன் கலந்துகொண்டு, ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் நிர்மலாதேவியிடம் வழங்கினார்.
இதில் ரெட் கிராஸ் நிர்வாகிகள் ராஜேந்திரன், கேஜி நடராஜன், கமல்கோத்தாரி, சிதம்பரநாதன், வட்டாட்சியர் ஆனந்த், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல்,சிதம்பரம் மேலவீதியில் உள்ள கஸ்தூரிபாய் கம்பெனி துணிக்கடை நிறுவனம் ரூ 1.5 லட்சம் செலவில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.