
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூகத்தைச் சீர்குலைக்கும் போதைப் பொருள், கள்ளச் சாராயம், லாட்டரி மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டத்திற்குப் புறம்பான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தக் கோரி தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் மற்றும் தனிப்படை காவலர்கள் செம்பியன்மாதேவி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனம் மற்றும் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். கிளியூர் ரகோத்தமன், விஜயகுமார், மற்றும் வட மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரும் லாரியில் சட்ட விரோதமாக 14 டன் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது உடனடியாக அவர்களைக் கைது செய்ததோடு கடத்திய ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட விரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தபடியே உள்ளன. இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.