சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாகவும், தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க உதவியாகவும் செயல்பட்ட மூன்று நபர்களை கைது செய்துள்ளது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் தீவிரவாதக்கும்பலால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இது உலகளவில் எதிரொலிக்க இந்தியாவிலுள்ள என்.ஐ.ஏ., ரா, உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து சிறப்பு புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபர்களுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையை துவங்க, அவர்களுக்கு உறுதுணையாக அந்தந்த மாநில காவல்துறையும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், சுட்டுப்படுகொலை செய்யப்ப்பட்ட எஸ்.எஸ்.ஐ. கொலையில் தொடர்புடையவர்களுக்கு நிதி கொடுத்தவர்களும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக மதரஸாக்களில் தீவிரவாத பயிற்சி அளிக்க திட்டம் தீட்டிய மூன்று நபர்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது.
"தேவிபட்டினம் புஹாரியா பள்ளி மைதானம் அருகில், என்.ஐ.ஏ. தொடர்புடைய வழக்கிலுள்ளவர்கள் அங்கிருந்த இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வழக்கமான ரோந்துப்பணியில் இருந்த நான் சக போலீசார் சகிதம் அங்கு சென்ற போது நால்வர் அங்கிருந்தனர். எங்களைப் பார்த்ததுமே தப்பியோடிய முயற்சித்தனர். அதில் மூவரை மட்டுமே பிடிக்க முடிந்தது. அவர்களிடம் விசாரணை செய்ததில் தப்பியோடிய நபர் தேவிபட்டிணம் அன்பு பக்ருதீன் மகனான சேக் தாவூத் என்றும், மீதமுள்ளோர் நத்தம் கீழக்கரையை சேர்ந்த கமால் மகன் புறாக்கனி (எ) பிச்சைக்கனி, விழுப்புரம் மணல்மேட்டை சேர்ந்த முகமது அமீர், கடலூர் கோண்டூரை முகமது அலி என்பது தெரியவந்தது.
மேற்படி இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமுக்கு பணம் பரிமாற்றம் செய்ததும், தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க உதவியாக முகமது ரிபாஸ் குறித்து விவாதித்ததும் தெரிந்தது. மேலும் ஜனநாயகத்திற்கு எதிராக ஆட்களை திரட்டி தேவிபட்டினம், கீழதில்லையேந்தல் மதரஸாக்களில் பயிற்சி அளிப்பது குறித்து விவாதித்திக்கொண்டிருந்ததும் தெரிந்தது" என தேவிபட்டினம் காவல் நிலைய எஸ்.ஐ.ஜெகதீஸ்வரன் புகாரளிக்க இவர்கள் மூவர் மீதும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தேவிபட்டினம் போலீஸார் மூவரையும் கைது செய்து ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி ஜெனிட்டா மூவரையும் பிப்ரவரி 6- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மூவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதானவர்களிடமிருந்து ஜிகாத், ஜனநாயகம் ஒரு சூப்பர் ஆகிய இஸ்லாமிய மார்க்க புத்தகங்களும், 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பியோடிய சேக் தாவூத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.