
ராமமோகன ராவ் கூறியது உண்மைக்கு புறம்பானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கடந்த ஏப்ரல் 7ம் தேதி ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செப்டம்பர் 28ம் தேதி ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
2011ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூட நடவடிக்கை மேற்கொண்டதே அதிமுக அரசுதான். ஆலை நிர்வாகத்திடம் பணம் வாங்கியிருந்தால் எப்படி மூடியிருக்க முடியும். காவிரி விவகாரம் சமூக வளைதளங்களில் தீர்க்ககூடிய பிரச்சனை அல்ல, சட்டரீதியாகதான் அணுக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளோம்.
ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்று ராமமோகன கூறியது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு, யாரையோ தப்பிக்க வைப்பதற்காக தவறான செய்தியை கூறி வருகிறார். மே 3ம் தேதிக்குள் காவிரி திட்டம் குறித்த வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.