'முத்துவும் 30 திருடர்களும்' என்ற சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் பண மோசடி தொடர்பான விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று வெளியிட்டார். அப்புத்தகத்தின் முதல் பிரதியை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையின் கூடுதல் ஆணையர் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ''ரிசர்வ் பேங்கில் இருந்து ஒரு அலெர்ட் வந்தது. அதாவது போலியான பெயரில் பேங்க் ஒன்று நடத்துகிறார்கள் என்பது தான் அந்த அலெர்ட். அதை நாம் விசாரிச்சு பார்த்தோம். அதில் லைசென்ஸ் வாங்காமல் வங்கி மாதிரி நடத்திக் கொண்டிருந்தார்கள். நிறைய டெபாசிட் வாங்கி நிறைய ஸ்கீம்களை கொண்டு வந்துள்ளார்கள். அந்த போலி வங்கியில் சோதனை செய்து முக்கியமானவர்களைக் கைது செய்துள்ளோம்.
மேலும், அந்த வங்கியில் இருந்த 3000 போலி வங்கிக் கணக்குகளைக் கண்டுபிடித்துள்ளோம். மொத்தம் 8 இடங்களில் சோதனை செய்துள்ளோம். மதுரை, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் போலி வங்கிகள் நடத்தியது தெரிய வந்துள்ளது. 56 லட்சம் ரூபாய் வரை கைப்பற்றியுள்ளோம்.'' என்றார்.