Skip to main content

“மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர்..” மதுரை ஆதீனத்திற்கு ராமதாஸ் இரங்கல்..

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

Ramadas condolences to Madurai Aadeenam ..

 

மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் (வயது 77) ஆகஸ்ட் 9ஆம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவரது உயிர் நேற்று (13/08/2021) பிரிந்தது. 

 

இவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மதுரை ஆதீனத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சந்நிதானம் அருணகிரி நாதர், உடல்நலக் குறைவால் நேற்று இரவு மதுரையில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

 

Ramadas condolences to Madurai Aadeenam ..

 

மதுரையில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக 30 ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட அருணகிரிநாதர், அதன்பின் தமிழையும், சைவத்தையும் தமது இரு கண்களாகக் கருதி தொண்டு செய்துவந்தார்; பகுத்தறிவு பரப்புரைகளையும் செய்துவந்தார்.

 

என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட சமய, சமுதாய நல்லிணக்க மாநாடுகள், சமத்துவ பொங்கல் விழாக்கள், மதுவுக்கு எதிரான பரப்புரைகள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் தனித்துவம் கொண்டவை என்று பாராட்டியவர். மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவு தமிழுக்கும், சைவ சமயப் பணிகளுக்கும் எவராலும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

 

மதுரை ஆதீனம் அவர்களை இழந்து வாடும் ஆதீன நிர்வாகிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்