Skip to main content

நீதியின் பக்கம் நிற்க வேண்டும்; மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம் 

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Ramadoss condemns Union Minister

மேகதாது அணை சிக்கலில் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய  மத்திய அமைச்சர் கர்நாடகத்தின் குரலாக ஒலித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாது அணை சிக்கல் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களின் அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு பேச்சு நடத்தினால்  மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண முடியும் என்றும் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருக்கிறார். மேகதாது அணை சிக்கலில் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய  மத்திய அமைச்சர் கர்நாடகத்தின் குரலாக ஒலித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஏதேனும் ஒரு சிக்கல் குறித்து பேச்சு நடத்தினால்  தீர்வு  ஏற்படும், அது இரு தரப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றால் அது குறித்து பேச்சு நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. தீர்க்க முடியாத சிக்கல்களைக் கூட பேசித் தீர்க்க முடியும்  என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது.  ஆனால், மேகதாது அணை சிக்கல் அப்படிப்பட்டதல்ல. காவிரி ஆற்று நீர் சிக்கலில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தண்ணீரையும் பறிக்கும் நோக்கத்துடன் கர்நாடக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் தான் மேகதாது அணை திட்டம் ஆகும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும்  கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையைக் கட்ட முடியாது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் அது குறித்து தமிழக அரசு எவ்வாறு  பேச்சு நடத்த முடியும்? அவ்வாறு பேச்சு நடத்த ஒப்புக்கொள்வதே தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்ப்பதாகத் தான் அமையும்.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184  டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விடக் கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும். எனவே, மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் வி.சோமண்ணா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த போதே  மேகதாது அணைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தவர்.  மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சராகக் கர்நாடகத்தைச் சேர்ந்த சோமண்ணா நியமிக்கப்பட்டபோதே அதற்குத் தமிழக உழவர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. மத்திய அமைச்சரான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனியாவது அவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராகச் செயல்பட வேண்டும். மேகதாது அணை தொடர்பாகப்  பேச்சு நடத்த மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதைத் தமிழக அரசு ஏற்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாமக தலைவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
DMK MLAs notice to PMK leaders!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். 

DMK MLAs notice to PMK leaders

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், “எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலக தயாரா?.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் திமுக நிர்வாகி இல்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக உதயசூரியன் எம்எல்ஏ பேசுகையில், “கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அரசியல் ஆதாயம் வேண்டி புகார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பாமக தலைவர்கள் வைத்துள்ளனர். 37 ஆண்டுக்கால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். 

DMK MLAs notice to PMK leaders

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்களை இருவரும் தொடர்புப்படுத்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டிஸில், “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் வைத்த குற்றச்சாட்டைத் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடரப்படும். அந்த நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தும் வகையில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாலியல் தொந்தரவு; பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Brajwal Revanna suraj revanna brother arrested

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை வாங்கித்தருவது தொடர்பாக அவரை அணுகிய போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஊழியர் அளித்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் பிரஜ்வல் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரது தந்தை ரேவண்ணா பெண் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரஜ் ரேவண்ணாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, 342, 506 இன் கீழ் ஹோலேநரசிபுரா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரஜ் ரேவண்ணா கடந்த 16 ஆம் தேதி (16.06.2024) ஹாசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகடா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்தாரர் கூறியுள்ளார். இந்த கைது சம்பவம் தொடர்பாக ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முகமது சுஜிதா கூறுகையில், "மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமேலவை உறுப்பினரும். எச்.டி ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்" என தெரிவித்துள்ளார்.