அதிமுக தலைமையிலான கூட்டணியில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடலூர் மாவட்டம் ராமநத்தம் தொழுதூர், திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாசலம், மங்கலம்பேட்டை ஆகிய ஊர்களில் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வாக்குகள் சேகரித்தார்.
கூட்டங்களில் அவர் பேசுகையில்,
"நானும் விவசாயி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயி. விவசாயிகளை நேசிக்கின்ற, வாழவைக்க வேண்டும் என்று நினைக்கின்ற கூட்டணி எங்கள் கூட்டணி. பா.ம.க சார்பில் தொடர்ந்து விவசாயிகளுக்கான பட்ஜெட்டை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறோம். அதுபோல தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் போடுவதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தை பா.ம.க ஆதரித்தது. தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது போன்று திமுக ஆதரவாளர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தி.மு.க எதிரக்கட்சி அவர்களால் எப்படி கோரிக்கையை நிறைவேற்ற முடியும்? கோரிக்கையை நிறைவேற்றுகிற இடத்தில் நமது கூட்டணியில் உள்ள அ.தி.மு.க அரசு உள்ளது. எனவே தேர்தலுக்குப் பிறகு முதல்வரிடம் பேசி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நான் வலியுறுத்துவேன்.
எங்கள் கூட்டணி அமைதி கூட்டணி. தி.மு.க கூட்டணி அராஜக கூட்டணி பிரியாணி கடைகளில், பியூட்டி பார்லர்களில், செல்போன் கடைகளில் காசு கொடுக்காமல் தகராறு செய்து அந்த கடைகளை அடித்து நொறுக்கும் என்ற அராஜக கூட்டணி" என்றார்.
இந்த பிரச்சாரக் கூட்டங்களில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித் தேவன், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சேகர், பாமக வன்னியர் சங்க முதன்மை செயலாளர் பு.தா.அருள்மொழி, மாநில துணைப் பொதுச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில மகளிர் சங்க செயலாளர் தமிழரசி, பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, தாமரை மணிகண்டன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.