நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ந்தேதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ்-ன் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் இறங்கின. தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது, பாதுகாப்பு கருதி அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.
இதையடுத்து தேர்தல் தள்ளிப்போகும் என்று இருந்த நிலையில், நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாளை தேர்தல் என்று திடீரென இன்று உத்தரவு வந்ததால், இந்த தேர்தல் முறைப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. நிறைய குளறுபடிகள் வரும். வெளியூரில் இருப்பவர்கள் தபால் வாக்குகள் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்று சுவாமி சங்கரதாஸ் அணி தெரிவித்தது.
அதன்படியே, மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெற இருக்கின்ற நிலையில் என்னால் வாக்களிக்க இயல்லாது. மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு படிவம் தாமதமாக கிடைத்தது. தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் என்னால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு படிவத்தை முன்கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. என்னால் வாக்களிக்க இயலாமல் போனதற்காக வருந்துகிறேன். இது போன்ற துரதிர்ஷ்டமான நிலை வருங்காலகளில் ஏற்படக்கூடாது’’என்று தெரிவித்துள்ளார்.