சட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமால் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, அமைச்சரவை தீர்மானத்தின் மீது கவர்னர் உத்தரவு பிறப்பிக்காதவரை சட்டவிரோத காவலில் உள்ளதாகக் கருத முடியாது என்றும், அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர்தான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்தார். ஆளுநரின் அதிகாரத்தைக் கேள்வி எழுப்ப முடியாது என்றும், தீர்மானத்தை பரிந்துரைப்பதுடன் அரசின் கடமை முடிந்ததாக தெரிவித்தார். ஏழு பேரை விடுதலை செய்ய மாநில அரசு நினைத்தாலும், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என்றும், நளினி சட்டவிரோத காவலில் இல்லை என்பதால், அவரது ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கில் மத்திய அரசை கலந்தாலோசித்துதான் மாநில அரசு முடிவெடுக்க முடியும் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே ஆயுள் தண்டனை அனுபவிப்பதால், சட்டவிரோத காவலில் இருப்பதாகக் கருத முடியாது எனத் தெரிவித்தார். மேலும், 2016-ஆம் ஆண்டில் எழுவர் விடுதலை தீர்மானம் குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்துவிட்டதாகவும், மாநில அரசின் தீர்மானத்தை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் பூஜ்ய மதிப்புடையதாகத்தான் கருத முடியுமென்பதால், நளினியின் ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், அமைச்சரவை ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும், தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் வாதிட்டார். தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா, அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா என சந்தேகம் எழுவதாகவும் குற்றம் சாட்டினார்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் அறிவுறுத்தி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.