திருச்சி லலிதா நகைக்கடையில் நேற்று ரூபாய் 13 கோடி மதிப்புள்ள நகைகளை முகமூடிக் கொள்ளையர்கள் சுவற்றில் துளையிட்டு திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களே சம்மந்தப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்களை கூறி வந்தனர். மேலும் சில தடயங்களையும் சேகரித்துள்ளதாக கூறினார்கள்.
இந்த நிலையில் புதுக்கோட்டை டைமண்ட் லாட்ஜில் தங்கியிருந்த 6 வட மாநில கொள்ளையர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் போலீசார் வாகன சோதனை செய்த போது, இரு சக்கர வாகனத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் திருடப்பட்ட நகைகளுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையை பார்த்த திருடர்களில் சுரேஷ் இரு சக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஒடி விட்டான். மற்றொரு திருடனான மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். திருடனிடம் சுமார் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்த போலீசார், லலிதா நகைகடையில் திருடு போன நகைகளும், பறிமுதல் செய்த நகைகளும் ஒத்துப்போவதை காவல்துறையினர் பார்கோடு வைத்து உறுதி செய்தனர்.
ஆனால் நகை திருடன் போலீசாரின் சந்தேகம் போல வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் நகைகளுடன் பிடிபட்ட நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அந்த கும்பல் அடிக்கடி இது போல கொள்ளையடித்துவிட்டு கேரளா பக்கம் போய் தங்கிவிடும் குழுவினர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் சிசிடிவி காட்சிகளில் இருவர் திருடிய காட்சி பதிவாகியிருந்த நிலையில், ஒருவன் சிக்கிய நிலையில், மற்றொருவருக்கு காவல்துறை வலைவீச்சு.
இந்த கொள்ளை சம்பவத்தில் முருகன் என்ற திருடன் முக்கிய தலைவனாக பங்காற்றியுள்ளதாவும், கூட்டு திருட்டில் ஈடுப்பட்டிருப்பதும், மேலும் பலர் சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.