ரஜினிகாந்த் தமிழக திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வலம் வருபவர். அதே போல கடந்த 20 வருடங்களாக அவர் அரசியலுக்கு வருகிறார் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நேரடியாக அரசியலுக்கு வருவேன் என அறிவித்தது இன்னும் ரஜினியின் அரசியல் பிரவேச டெம்போவை குறைக்காமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ் என்பவர் திருச்சியை அடுத்த குமாரமங்கலம் பைபாஸ் ரோடு அருகே அவருக்கு சொந்தமான 1,850 சதுர அடி இடத்தில் ரஜினிகாந்தின் பெற்றோர் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோருக்கு ரூ.35 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டினார்.
கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராணராவ் நேரடியாக வந்து, பெற்றோரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். மணி மண்டபத்தில் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. ஸ்டாலின் புஷ்பராஜ் மணிமண்டபத்தை கட்டினாலும், ரஜினி மக்கள் மன்றம் சார்பில்தான் திறப்பு விழா நடந்தது. இந்த நிலையில், மணிமண்டபத்திற்கு மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு ஸ்ரீரங்க ரெங்கநாதரை தரிசித்து விட்டு ரஜினிகாந்த பெற்றோர் சிலைகள் இருக்கும் இடத்திற்கு சென்றார்.
அங்கே அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சாதுக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தாமதமாகிக்கொண்டே இருக்கிறதே? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியநாராயணராவ் கூறியதாவது:-
திருச்சியில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் விரைவில் வருவார். தற்போது அவர் மிகவும் ‘பிஸி’யாக உள்ளார். ஆனாலும், இங்கு நடக்கும் நிகழ்வுகளை தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக்கொண்டும்தான் உள்ளார். மண்டலாபிஷேக நிகழ்ச்சியில், நாட்டு மக்கள் நலமாக இருக்கவும், நல்ல மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.
ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அவர், அரசியலுக்கு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற 23-ந் தேதிக்கு பிறகு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தாமதமாகி கொண்டு இருப்பது பற்றி சிலர் கூறி வருகிறார்கள். அவர் தாமதம் செய்வது நல்லதுக்கு தான். அவர், தமிழக மக்களுக்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலையை அவர் உற்றுநோக்கி வருகிறார். நிச்சயம் அவர், அரசியலுக்கு வந்தே தீருவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் தனது பெற்றோர் மணிமண்டபத்தை பார்க்க திருச்சி வருகிறார் என்ற அறிவிப்பிலும் சூசகம் உள்ளது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழருவிமணியன் தலைமையில் ரஜினிகாந்த ரசிகர்கள் பொதுக் கூட்டம் பிரமாண்டமாக திருச்சியில் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அறிவிப்பு வந்தது. அந்த பொதுக் கூட்டத்திற்கு பிறகு ரஜினி, கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்றார்.
அதே போன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ரஜினியின் அடுத்த அரசியல் அறிவிப்பு இருக்கும் என்றும், அவருடைய பெற்றோரின் மணிமண்டபத்தை பார்க்க அவர் திருச்சி வருகிறார் என்கிற தகவலும் உறுதியான நிலையில், ரஜினிகாந்த், திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடத்துவதற்கான திட்டமும் இருப்பதாக ரஜினி கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.