தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று (24-08-24) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புத்தகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ''யாருக்கும் தெரியாத ஒரு செய்தி, 1999 ஆம் ஆண்டு தான் 'முதல்வன்' என்கின்ற ஒரு படம் வந்தது. திரைப்படத்துறையில் எனக்கு கிட்டத்தட்ட 25 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. சினிமாவில் ஈடுபாடு உண்டு. நான் ஏற்கனவே டிஸ்ட்ரிபியூட்டராக, திரைப்பட தயாரிப்பாளராக இருந்த காரணத்தினால் சினிமாத்துறை நண்பர்களுடன் எனக்கு எப்பொழுதும் பழக்கம் இருக்கிறது.
ஒரு நண்பர் என்னிடத்தில் சொன்னார், 'முதல்வன்' படத்தில் நடிக்க எப்படியாவது ரஜினிகாந்த்திடம் ஒப்புதல் வாங்கி அவரை நடித்து வைத்து விட வேண்டும் என முயற்சி நடைபெற்றது. அவரிடத்தில் போய் கேட்டார்கள். 'முதல்வன்' என்கின்ற படம் அருமையான படம், நன்றாக ஓடும். நீங்கள் அவசியம் அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என கேட்டபோது ரஜினிகாந்த் ஒரே வரியில் சொன்னாராம், 'தமிழ்நாட்டில் பெரியவர் ஆண்டு கொண்டு இருக்கின்ற பொழுது நான் அதில் நடிப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை' என்று சொன்னாராம். கலைஞர் ஆண்டு கொண்டு இருக்கும் பொழுது முதல்வன் என்ற அந்த தலைப்பில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன பெரிய உள்ளத்திற்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.