தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இரு தினங்களுக்கு வடதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையில், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.