தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையின் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு கன மழை பொழிந்து வருகிறது. அதேபோல் மீஞ்சூர், பழவேற்காடு, பெரியபாளையம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கன மழை பொழிந்து வருகிறது.
இன்று தமிழகத்தில் பிற்பகல் ஒரு மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், திருவாரூர், விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 1:00 மணி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பொழிந்து வருகிறது. மேகமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளதால் வாகனங்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வரும் 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.