Skip to main content

ஒரு துளி மழை நீரையும் வீணாக்காமல் சேமிக்கும் இளைஞருக்கு ஆட்சியர் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

 

    நிலத்தடி நீரை பாதுகாக்க மழை நீரை சேமித்து பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாலும் மழை நீரை சேமிக்க ஆறு, குளம், ஏரி, குட்டை, வாய்க்கால் அத்தனையும் காணவில்லை. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் இறங்கி இருந்தாலும் அதற்கு அரசாங்கமும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதற்கென மத்திய அரசில் ஜல்சக்தி அபியான் என்ற ஒரு அமைப்பை உருவாக்க தண்ணீரை சேமிப்பது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

c

  

 இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்ற இளைஞர் தனது பழைய கிணற்றை நீர்தேக்க தொட்டியாக மாற்றி தனது ஓட்டு வீட்டில் விழும் ஒரு துளி தண்ணீரையும் குழாய்கள் மூலம் தண்ணீர் தொட்டிக்குள்  அனுப்பி சேமித்து குடிக்கவும் வீட்டுப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி வீட்டில் உள்ள மரங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். கஜா புயல் பாதிப்பின் போது.. பல குடும்பங்களுக்கு வீரமணி வீட்டில் சேமிக்கப்பட்ட மழைத் தண்ணீர் தான் தாகம் தனித்தது.

 

    இது மட்டுமின்றி மரக்கன்றுகளுக்கு நேரடியாக வேரில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறையை கையாண்டு வருவதை நக்கீரன் இணையத்தில் தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டிருந்தோம். பல தொலைக்காட்சி, செய்தி தாள்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் வீரமணி வீட்டிற்கே சென்று பல்வேறு ஆய்வுகளை செய்த பிறகு ஆவணப்படங்களும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து வந்த மத்திய ஜல்சக்தி அபியான் ஆய்வுக்குழுவினர் வீரமணியின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த பிறகு அவரைப் பாராட்டினார்கள். இதே போல ஒவ்வொரு அரசுக் கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்பை தொடங்க வேண்டும் என்றனர்.


    அதே போல அமைச்சர் வேலுமணியும் மழைநீர் சேமிப்பு குறித்து பேசி வருகிறார். ஆனால் அவரது பேச்சுக்கு பல அரசுக் கட்டிடங்களிலும் குழாய்களை மட்டும் தொடங்க விட்டு மழைநீர் சேமிப்பு என்று படங்கள் மட்டும் எடுக்கப்பட்டு ஏமாற்றி வருகிறார்கள். 


    இந்த நிலையில் தான் உண்மையிலேயே மழை நீரை ஒரு துளிகூட வீணாக்காமல் சேமித்து பயன்படுத்தி வரும் வீரமணியின் செயலைப் பாராட்டி சுதந்திர தினத்தில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழாவில் வீரமணிக்கு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள். 

சார்ந்த செய்திகள்