ஈரோடு ஈஸ்வரன் கோயில் வழியாக செல்லும்போது மக்கள் கூட்டம் பிரமாண்ட வரிசை கட்டி நின்றது. மக்களுக்கு பக்தி மீது அளவுக்கதிமான ஈடுபாடு என நாம் நினைத்து வரிசையில் இருந்த ஒரு பக்திமானிடம் இன்று என்னங்க விஷேசம் இவ்வளவு கூட்டம் இருக்குது என்றோம். அதற்கு அவர் "அட என்னங்க நீங்க இந்த ஒரு மாசமா எப்படி நாங்க இருந்தோம் தெரியுமா? விரதம்ங்க பின்னே காலங்காலமா குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு நாளாவது ஆடு, கோழி, மீண் என ஏதோ ஒன்றை சாப்பிட்டே பழகிட்டோம்.
இது புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளுக்கு ஆகாது ஆகவே விரதம் இருக்கிறோம். இன்னைக்கு புரட்டாசி நான்காம் சனிக்கிழமை . அடுத்த சனிக்கிழமை ஐப்பசி மாதம் ஆகவே இதோட புரட்டாசி கடைசி சனி முடிந்தது. இன்றோட எங்க விரதமும் முடிவுக்கு வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல வீட்டில் ஆட்டுக்கறியோ, கோழிக் கறியோ அல்லது மீண் எடுத்து வந்து சாப்பிடுவோம். விடியற்காலை தூங்கி எழுந்ததும் நான் மட்டன் கடையில் தான் இருப்பேன். காலை டிபனுக்கே கமக மனு குடல்கறி தான் எங்க வூட்டுல காலை, மதியம், இரவுனு ஒரு பிடி பிடிப்போம்" என அசைவ உணவு உண்பதை சிலாகித்து கூறினார் அவர்.
பெருமாளை மனம் விட்டு தரிசிக்கிறார்களோ இல்லையோ இன்றுடன் விரத்திற்கு விடை கொடுப்பதும் நாளை விரும்பிய உணவை உண்பதிலுமே பலரின் மனநிலை உள்ளது.