சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மணமகள் நகர் பாரதி அவென்யூ பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த 9 பெண்கள், மூன்று ஆண்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.
அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்திய பொழுது அந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. கென்யா நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள், தன்சானியா நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள், ஒரு நைஜீரிய பெண் என மொத்தம் ஒன்பது பேர் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 'லோகாண்டோ' என்ற மொபைல் செயலி மூலம் பெண்களிடம் பாலியல் உல்லாசம் அனுபவிக்க மூன்று ஆண்கள் வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அந்த வீடு யாருடையது என போலீசார் விசாரணை செய்த பொழுது அது ஓய்வுபெற்ற டிஐஜி ராமச்சந்திரன் என்பவரின் மகன் விக்ரம் என்பவருடையது என்பது தெரியவந்தது. தற்பொழுது வெளிநாட்டில் இருக்கும் விக்ரம் தன்னுடைய இந்த வீட்டை இலங்கையை சேர்ந்த நிர்மலா என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 35 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடப்பட்ட நிலையில் நிர்மலா அந்த வீட்டை கெஸ்ட் ஹவுஸாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதில் பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. எட்டு கிராம் கொண்ட 5 கஞ்சா பாக்கெட்டுகள், 15 ஹுக்கா பாக்கெட், 23 செல்போன்கள், 31 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.