ஒவ்வொரு தேர்தலிலும் பட்டதாரிகள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் போட்டியிட்டு வருகிறார்கள். அதிலும் சட்டமன்றம், பாராளுமன்றத் தேர்தல்கள் என்றால் கட்சி சார்ந்து அரசு பணியில் இருப்பவர்களும் ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களம் காண்பார்கள்.
உள்ளாட்சித் தேர்தல்களில் அதிகமாக பட்டதாரிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், பொறியாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதே நேரத்தில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் முதுகாடு ஊராட்சி தலைவர் பதவிக்கு எம்.பி.பி.எஸ். படித்து புதுக்கோட்டை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் தனியாக கிளினிக் நடத்தி வரும் 29 வயது பெண் மருத்துவர் உமாமகேஸ்வரியும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அதேபோல அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் சித்த மருத்துவரும் போட்டியிடுகிறார். இதுவரை சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு மட்டும் போட்டியிட்டு வந்த எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் தற்போது முதல்முறையாக ஊராட்சி மனறத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வேட்பாளர் மருத்துவர் உமாமகேஸ்வரி கவியரசன் எம்.பி.பி.எஸ் கூறும் போது.. பின் தங்கிய கிராமம் முதுகாடு. அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. அதனால் தான் மருத்துவர் ஆனாலும் கிராமத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன். பலரும் கேட்டார்கள் டாக்டர் போய் ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடலாமா? எம்.பி, எம்.எல்.ஏ சீட்டு வாங்கி போட்டியிடலாமே என்று.. முதலில் என் கிராமத்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு அந்த பதவிகள் பற்றி யோசிப்போம். கிராம ஊராட்சி என்பது உயர்ந்த நிர்வாகம் கொண்டது.
இங்கிருந்து மக்களிடம் கலந்து பேசி போடப்படும் கிராம சபை தீர்மானங்கள் தான் வலுவானதாக இருக்கிறது. இந்த கிராம தீர்மானங்களைத் தான் அரசுகள் செயல்படுத்துகிறது. அதனால் தான் முதலில் கிராமத்தில் இருந்து தொடங்க நினைக்கிறேன். நான் வெற்றி பெற்றால்.. திறந்த சிறந்த நிர்வாகம்.. யார் வேண்டுமானலும் ஊராட்சி கணக்குகளை பார்க்கலாம். குடிதண்ணீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள், தெருக்கள், அரசு அலுவலகங்கள், ரேசன் கடைகள் எங்கும் தவறு நடக்காமல் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது. சிறந்த கல்வியை கிராமத்திலேயே கொடுப்பது. மாதம் தோறும் மருத்துவ முகாம். குடிசை வீடுகள் இல்லாத கிராமம் என்று அனைத்தையும் மாற்றம் செய்வதுடன் அரசு நலத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு வருவது என்று அடுக்கிக் கொண்டே சென்றார் உமாமகேஸ்வரி.