தமிழ்நாடு அரசு வேலைகளைக் கூட அனைத்து மாநிலத்தவர்களுக்கும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் கோடிக்கணக்காண இளைஞர்கள் படித்து படடங்களை வாங்கி வைத்து விட்டு வேலை இல்லாமல் தவிக்கும் நிலையில் தான் தமிழக அரசு இப்படி வஞ்சிக்கிறது. மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில பணிகளில் 100 சதவீதமும் அந்த மாநிலத்தவருக்கே.. மத்திய அரசு வேலையில் 80 சதவீதம் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவருக்கே என்பதில் உறுதியாக இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் வந்து வேலை செய்யலாம் என்று சொல்வது தமிழக இளைஞர்களுக்கு அரசாங்கம் செய்யும் கொடுமை.
இந்த நிலையில் தான் தமிழக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முடிவுகளை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் இதற்கு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் களமிறங்கினால் தான் அரசுகள் கவனிக்கும் என்ற நிலை இருந்தது. தமிழக அரசு விதியை மாற்று என்ற முழக்கத்துடன்.. முதல் கட்டமாக புதுக்கோட்டை காந்தி பேரவை சார்பில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை ஒன்றிணைத்து பிரமாண்டமான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
புதுக்கோட்டை திலகர் திடலில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சுமார் 500 பட்டதாரி இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே.. மத்திய அரசுப் பணியில் 90 சதவீதம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளை ஒன்றாக இணைத்திருப்பதை திரும்ப பெற வேண்டும், போட்டித் தேர்வுகளில் தமிழ் வினாக்களை மாற்றாதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கையெழுத்து இயக்கமும் நடந்தது.
இது குறித்து பட்டதாரிப் பெண்கள் கூறும் போது, தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை ஏமாற்றும் விதமாக அரசு செயல்படுகிறது. அடிக்கடி தேர்வு முறைகளை மாற்றுவது, தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகளை தமிழர் அல்லாதவர்களுக்கு வழங்கி எங்களை வஞ்சிக்கிறார்கள். இந்த முறைகளை மாற்ற அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (18/10/2019) புதுக்கோட்டையில் தொடங்கிய போராட்டம் அடுத்து தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். மீண்டும் ஒரு உரிமைக்கான போராட்டத்தை தமிழகம் சந்திக்கும் என்றனர்.