சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள லால்புரம், பள்ளிப்படை, சி. கொத்தங்குடி, நான் முனிசிபல், தண்டேஸ்வரநல்லூர், உசூப்பூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்கப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் லால்புரம் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணியைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்து ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து புதன்கிழமை மாலை தமிழக முதல்வருக்கு நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கக் கூடாது என தபால் கார்டு அனுப்பும் போராட்டம் சிதம்பரம் தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவர் வி. எம் சேகர், வார்டு உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரிஉள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கோஷங்களை எழுப்பினார்கள்.
இது குறித்து லால்புரம் ஊராட்சியில் வசிக்கும் வசந்தி மற்றும் ராஜலட்சுமி கூறுகையில், “லால்பரம் ஊராட்சியில் 400 ஏக்கருக்கு மேல் விளை நிலம் உள்ளது. இதில் நெற்பயிர்கள் விளைகிறது. மேலும் 3500க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தினக்கூலி தொழிலாளர்கள் ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் அதிக வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் அதிகமாக மாறும் எனவே கூலி வேலை செய்யும் எங்களால் இதனைக் கட்ட முடியாது. எங்கள் கிராமத்தை நகரத்துடன் இணைக்கும் இணைப்பு சாலையே கிடையாது. எனவே தமிழக அரசு மாறு பரிசீலனை செய்து ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.