தமிழகத்தில் படிப்படியாக மணல் குவாரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் திறக்கப்படும் இடங்களில் பொதுமக்களின் போராட்டங்களும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் அருகே கூடலூர், விராலிமலை அருகே மதயானைப்பட்டி, அறந்தாங்கி அருகே அழியாநிலை மற்றும் மணமேல்குடி அருகே இடையாத்திமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள காட்டாறுகளில் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கனிமவளத் துறையின் மூலம் மணல் குவாரி திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் தலா 12 ஏக்கர் பரப்பளவில் சுமார் 60 ஏக்கரில் சுமார் 5.87 லட்சம் கன மீட்டர் மணல் அள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது.. கூடலூரில் உள்ள தெற்கு வெள்ளாற்றில் சுமார் 12 ஏக்கரில் செயல்பட உள்ள குவாரியில் 1.47 லட்சம் கன மீட்டர் அளவிற்கு மணல் அள்ளப்பட உள்ளது. இதேபோன்று, மதயானைப்பட்டியில் உள்ள கோரையாற்றிலும் அதே ஊரில் உள்ள பேராம்பூர் ஆற்றிலும் மணல் குவாரி அமைக்கப்பட உள்ளது.
மேலும், அழியாநிலை மற்றும் இடையாத்திமங்கலத்தில் உள்ள தெற்கு வெள்ளாறு என மொத்தம் 5 இடங்களில் தலா சுமார் 12 ஏக்கர் வீதம் 60 ஏக்கரில் இருந்து 5.87 லட்சம் கன மீட்டர் அளவிற்கு மணல் அள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென தடையில்லா சான்றையும் சுற்றுச்சூழல் துறை வழங்கியுள்ளதால் விரைவில் இதற்கான குவாரிகள் திறப்பதற்காக பாதைகள் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் நடந்தது. அப்போதே அழயாநிலை கிராம மக்கள் சாலை மறியலுக்கு தயாரானார்கள். ஆனால் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளவே குவாரி என்று அங்கு வந்த அதிகாரிகள் சமாதானம் செய்தனர். ஆனால் தற்போது 12 ஏக்கரில் மணல் அள்ள திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரியே சொல்லி இருப்பதால் இனிமேல் மணல் அள்ளவிடமாட்டோம் என்று பொதுமக்கள் வெகுண்டெழுந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை அழியாநிலை கிராமத்தில் மணல் குவாரி அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமையில அழியாநிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அவரச ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் மணல் குவாரி அமைத்தால் குடிதண்ணீர் பதிக்கப்படும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. அதனால் மணல் குவாரி அமைக்க அனுமதிக்க முடியாது என்றும் 16 ந் தேதி முதல் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடக்கும் ஆலமரத்தடியில் மெய்யநாதன் எம்எல்ஏ தலைமையில் தொடர் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மெய்யநாதன் எம் எல் ஏ கூறும் போது.. வெள்ளாற்றில் மணல் திருட்டிலேயே பல லட்சம் கனமீட்டர் திருடப்பட்டுள்ளது. அரசாங்கமும் குவாரி அமைத்து மணலை அள்ளிவிட்டது. அதனால் ஆறு அருகில் உள்ள கிராமத்தல் கூட குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கீழே போய்விட்டதால் சுமார் 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் மணல் அள்ளினால் இந்த பகுதியில் உள்ள பல கிராம மக்கள் நாடோடிகளாக தான் போக வேண்டும். அதனால தான் 16 ந் தேதி முதல் தொடர் போராட்டம். என்றனார். மேலும் பாதை அமைக்கவே போலிசை குவித்தார்கள் போராட்டத்தை ஒடுக்க மேலும் போலிசை குவித்தாலும் பல கிராம மக்கள் மண்ணையும் மணலையும் தண்ணீரையும் காக்க போராட வருவார்கள் என்றார்.