தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதை ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் இளமாறன் இந்த நிதிநிலை அறிக்கையை பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ 2022-23 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவகையிலும் சமூக நீதியை நிலை நாட்டுவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழும் என்பது மிகையில்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஏறத்தாழ 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
பெண்களின் முன்னேற்றத்தில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற அறிவிப்பு பெண் கல்வி ஊக்குவிப்பு பேச்சோடு நின்றுவிடாமல் செயல்திட்டத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் பள்ளியில் இடைநிற்றல் குறையும்; தன்னம்பிக்கை வளரும்.
பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் Smart classroom நிதி ஒதுக்கீடு, தொழில்நுட்ப அறிவை பெற உதவும் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்திப்பிடிக்கும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், மாவட்டந்தோறும் புத்தகக்கண்காட்சி, பள்ளிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக உள்ளது.
ஆசிரியர் - அரசு ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றபிறகும் புதிதாக போட்டித்தேர்வு அறிவித்த கடந்தகால அரசாணை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு மானியக் கோரிக்கையின் போதும் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையும் மிகுதியாக இருக்கின்றது. தற்போது வெளியிட்டுள்ள பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியாக அமைந்துள்ளதிற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.