விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மகள் ஜோதி (வயது 45). இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் குடியிருப்பு திட்டத்தின் கீழ், அரசு வீடு ஒதுக்கீடு செய்தது. கடந்த 30.11.2021-ல் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்படி தனக்கு அனுமதிக்கப்பட்ட வீட்டை கீழ்மட்ட அளவில் கட்டியுள்ளார். இவருக்கு அதிகாரிகள் முறைப்படி வங்கியில் செலுத்த வேண்டிய முதல் தவணை தொகையான 26 ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு ஒருவரின் வங்கி கணக்கில் செலுத்தி நூதன முறையில் ஊழல் செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறார் ஜோதி.
இதுகுறித்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தும் தனக்கு வரவேண்டிய பணத்தை அதிகாரிகள் தராமல் முறைகேடு செய்துள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். ஆனால் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் மீது எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு பணம் கிடைக்கவும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மாவட்ட விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன் என்பவர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவருக்கு விரைவில் நிதி உதவி கிடைக்க செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். விசாரணை நடத்திய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.