Skip to main content

'நடைமுறை அரசியல் என்பது கடினம்'- துரை வைகோ அட்வைஸ்

Published on 09/09/2024 | Edited on 09/09/2024
'Practical politics is difficult' opines Durai Vaiko

 

மதுரையில் திருச்சி எம்.பி துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். 'நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, ''நடிகர் விஜய்யை பொறுத்தவரை சினிமா உலகில் ஜொலிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம். லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரை ரசிக்கிறார்கள். நிறையப் பேர் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள். அவரால் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லது நடந்தால் சந்தோஷம் தான்.

அவர் அவருடைய இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தும் பொழுது எங்களுடைய இயக்கத்தினுடைய முக்கியமான கொள்கைகள் என்னவென்றால் சமூக நீதி, மதச்சார்பின்மை என்று சொல்லியிருக்கிறார். அது திராவிட இயக்கங்களின் சித்தாந்தங்கள், கொள்கைகள் எனவே வரவேற்கிறோம் என்று நான் சொன்னேன். இன்றும் நான் என்ன சொல்கிறேன் என்றால் நடைமுறை அரசியல் என்பது ரொம்ப கஷ்டம். நான் அரசியலுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. எவ்வளவு கஷ்டங்கள், துயரங்கள், பிரச்சனைகள் ஆகியவை நடைமுறை அரசியலில் இருக்கிறது. இதையெல்லாம் கடந்து வர வேண்டும். மாநாட்டில் அவருடைய கட்சியின் நிலைப்பாடு ஆகியவற்றைப் பற்றி விரிவாக சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவர் நல்லபடியாக சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

மகாவிஷ்ணு என்ற நபர் அவருடைய சொற்பொழிவைப் பள்ளியில் நடத்தி இருக்கிறார். மகாவிஷ்ணு ஆற்றியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல அது சனாதன சொற்பொழிவு. ஆன்மீகச் சொற்பொழிவை பொறுத்தவரை நல்லது தான். வள்ளலார் சொல்லியது ஆகியவை எல்லாம் நல்ல விஷயங்கள். ஆனால் அவர் ஆற்றியது ஆன்மீக சொற்பொழிவு கிடையாது சனாதன சொற்பொழிவு. இந்து மதம் வேறு, இந்து மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்துவது வேறு. இந்த மகாவிஷ்ணு என்பவர் தன்னைத்தானே கடவுள் என்று சொல்லுகிறார். தான் கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார். 60, 70 வயது உள்ளவர்கள் அவருடைய காலில் விழுகிறார்கள். இதுதான் ஆன்மிகமா? அது சனாதனம். மந்திரம் ஓதினால் மேலே இருந்து அக்னி மழை வரும்; மந்திரம் ஓதினால் இங்கு இருந்து அங்கு பறந்து போகலாம் என்று சொல்கிறார். இதுபள்ளி மாணவர்களிடம் பேச வேண்டிய பேச்சா? இதுதான் சனாதன பேச்சு'' என்றார்.

சார்ந்த செய்திகள்