
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தில் உள்ள வாணி மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவுநீர் அனைத்தும் முறையாக கழிவு நீர் தொட்டியில் செல்ல வசதி செய்யாமல் திறந்தவெளியில் விட்டுவிடுகின்றனர். இந்த கழிவுநீர் அருகிலுள்ள வன்னிய அடிகளார் நகர் தெருவுக்குள் வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதுப்பற்றி பள்ளி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் அவர்கள் அதுப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்தனர் அப்பகுதி மக்கள்.
இந்நிலையில் இன்று ஜீலை 31ந்தேதி மதியம் கழிவுநீர் அதிகளவு பள்ளி வளாகத்தில் இருந்து வெளிவந்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் முன்பைவிட அதிகளவு நாற்றமடித்தது. அதோடு யாரும் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலையில் ஓடினர். இதனால் கோபமான அப்பகுதி பெண்கள் பள்ளி முன் வந்து கேள்வி எழுப்பினர். அப்போதும் அப்பள்ளி நிர்வாகிகள் அசைந்துக்கொடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பள்ளி நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பள்ளி நிர்வாகம் போலிஸ்க்கு தகவல் கூறினர். அங்கு வந்த வாணியம்பாடி தாலுக்கா போலிஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களோ, இவ்வளவு பெரிய பள்ளி கட்டியவர்கள் கழிவுநீர் செல்ல தேவையான வசதி செய்யாமல் உள்ளார்கள். இது நியாயம்மா, நாங்கள் இந்த நாற்றத்தில் எப்படி குடும்பம் நடத்துவது என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதிகாரிகளிடம் கூறி பள்ளி மீது நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியபின்பு, நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பள்ளிக்குள் சென்று போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துவிட்டு பெண்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
வாணியம்பாடி பகுதியில் பிரபலமாகவும், அதேயளவு மாணவர்களிடம் கட்டணம் பெறுவதாக கூறப்படும் இந்த தனியார் பள்ளி சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் அப்பகுதி கல்வியாளர்கள்.