Published on 24/06/2018 | Edited on 24/06/2018
ஸ்ரீரங்கம் கோயிலில் மு.க.ஸ்டாலின் தனது நெற்றியில் வைத்த விபூதியை அழித்ததற்கு கோவில் பூஜாரிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பா.ஜ.கவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,
மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழகத்தில் 12 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இந்த பெருமைகள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியை சேரும்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2 நாட்கள் முன்பு தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அவர் அங்கு சென்றதற்கான காரணத்தை பத்திரிகைகளும், சமூக ஊடகங்களும் பல்வேறு விதமாக சொல்கின்றன. அவர் கோயிலில் பரிகார பூஜைகள் செய்ததாக கூறப்படுகிறது. காலை 6.15க்கு கோவிலுக்குள் சென்றவர் 8.45 வரை கோவிலுக்குள் இருந்திருக்கிறார்.
கோயிலின் மேற்குவாசல் வழியாக உள்ளே சென்றவருக்கு பூரண மரியாதை கொடுக்கப்பட்டதோடு, ரங்கநாதருக்கு சாத்தப்பட்ட மலர் மாலையும் மு.க.ஸ்டாலினுக்கு அணிவிக்கப்பட்டது. ரங்கநாயகி அம்மையாருக்குடைய பிரசாதமும் ஸ்டாலின் நெற்றியில் பூசப்பட்டது. அப்போது அதை அவர் அழித்தார். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
இறை நம்பிக்கை உடையவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த வழிப்பாட்டு ஸ்தலத்துக்கும் போக கூடிய முழு உரிமை படைத்தவர்கள். இது ஜாதி, மதம், மொழி, பிராந்தியங்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாரும் சமமாக கருதப்படக் கூடிய இடம் அது.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் இன்னொரு மதத்தின் வழிப்பாட்டு ஸ்தலத்துக்கு போகலாம். அங்கு தெய்வம் வேறாக இருந்தாலும் நம்பிக்கை ஒன்று தான். ஆனால் வேஷம் போடக்கூடியவா்கள், யாரையோ திருப்திப்படுத்த கூடியவா்கள், தெயவத்தை அவமதிக்க கூடியவா்கள் எந்த காரணத்தையும் கொண்டு எந்த வழிப்பாட்டு ஸ்தலத்துக்கும் அனுமதிக்க கூடாதவர்கள். அந்த பட்டியலில் ஸ்டாலின் சோ்ந்திருக்கிறார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் திருமணம் மற்றும் காது குத்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். 20 பிராமணா்களுக்கு ஆடைகள் வழங்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் சமய சின்னத்தை அழித்திருக்கிறார். அந்த நேரத்தில் அந்த சமய சின்னத்தை ஸ்டாலினுக்கு அளித்த பூஜாரிகள் பட்டர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதை நான் கண்டிக்கிறேன் என்றார்.