Skip to main content

எட்டுவழிச் சாலையை கைவிட்டு, இருக்கும் மூன்று சாலைகளை விரிவாக்கம் செய்ய பொன்.கௌதமசிகாமணி எம்.பி கோரிக்கை

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Pon.Gauthamasikamani MP's request to widen the three abandoned roads in Chennai to Salem.

 

 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தினை கைவிடக் கோரியும் ஏற்கனவே சென்னை-சேலம் இடையே இருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி பயன்படுத்தக்கோரியும் நாடாளுமன்றத்தில் 377-வது விதியின் கீழ் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி வலியுறுத்தினார்.

 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை என்பது பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலங்களை அழித்து, வாழ்வாதாரங்களை ஒழித்து, நீர்நிலைகளை சூறையாடி, மலைகளை குடைந்து, மேய்ச்சல் நிலங்களை தார் ரோடாக்கி, மரங்களை அழித்து, காட்டு விலங்குகளின் வாழ்விடங்களை, வழித்தடங்களை காணாமலாக்கி, இயற்கையின் சமன் நிலையை ஒழித்து கட்டப்போகிறதென்பது ஊரறிந்த ரகசியம். சேலம் - சென்னை இடையே ஏற்கனவே மூன்று நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. 

 

NH-48, NH-2 சாலையானது சென்னை - காஞ்சிபுரம் - கிருஷ்ணகிரி - தருமபுரி வழியாக சேலத்திற்கு 352.7 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழி, ஆறு வழிச்சாலையாக உள்ளது. 

 

NH-48 மற்றும் SH-18 சாலையானது 331.89 கிலோமீட்டர் இரண்டு வழி, நான்கு வழிச்சாலையாக உள்ளது. NH-32 சாலையானது சென்னை - விழுப்புரம் வழியாக 334.28 கிலோமீட்டர் நீளத்தில் இரண்டு வழி, நான்கு வழிச் சாலையாக இருக்கிறது. 

 

மேலும் கரோனா ஊரடங்கினால் தொழில்கள் பாதிப்படைந்து மக்கள் கடும் பொருளாதார நட்டத்தில் இருக்கும் இச்சூழலில் எட்டு வழிச்சாலைக்காக ரூ 10,000 கோடியை விரயம் செய்வது எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல. அது மட்டுமன்றி இந்த திட்டம் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களையும் விவசாயிகள் வாழ்வாதாரத்தையும் சீரழிப்பதோடு இந்த திட்டத்திற்காக இலட்சக் கணக்கான மரங்களும் வெட்டி வீழ்த்தப்படும். இந்தத் திட்டம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள மக்களின், விவசாயிகளின் வாழ்வை அழித்து நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும். எனவே எட்டு வழிச் சாலைக்கு பதிலாக ஏற்கனவே சென்னைக்கும் சேலத்திற்கும் இடையேயுள்ள மூன்று சாலைகளை விரிவாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். மேலும் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தினை கைவிட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி நாடாளுமன்றத்தில் 377-வது விதியின் கீழ் வலியுறுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்