தமிழகத்தில் தமிழர்களின் தனித்துவமாய் அடையாளமாய் கருதப்படும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டு பிறகு அது மக்கள் புரட்சியால் உடைக்கப்பட்ட பிறகு புத்தெழுச்சி உருவானது. முன்பெல்லாம் குறிப்பிட்ட சில பகுதியில் மட்டுமே நடந்து வந்த ஜல்லிக்கட்டு அதன் பிறகு தமிழகம் முழுக்க பல இடங்களில் சிறப்பாக நடக்க தொடங்கியது. அதன் ஒரு பகுதிதான் கொங்கு மண்டலத்திலும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது.
ஈரோட்டில் ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 18 ம் தேதி 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடக்கிறது. பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. தனியார் பள்ளியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் சுமார் 600 காளைகள் வரை போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் புறப்பட்டு வரும் வாடி வாசல், காளைகள் சீறிப்பாயும் இடம், ஜல்லிக்கட்டை சுற்றி நின்று மக்கள் பார்க்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீதாகர் கூறுகையில், "ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 18 ம் தேதி, 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. காங்கேயம் இனம் காளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், காளை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் மக்கள் பார்க்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்களது காளைகளை தயார் செய்து வருகின்றனர்." என்றார்.