
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் தற்பொழுது விசாரணைக்கு ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.
கடந்த 2018-19 ஆண்டுகளில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 'பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்'. இளம் பெண்கள், மாணவிகள் என பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை நக்கீரன் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை ஒருங்கிணை நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது நடைபெற்று வருகிறது. சிபிஐயின் சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் ,மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார், வசந்தகுமார் ஆகிய 9 பேரும் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்து இன்று ஆஜராக உள்ள 9 பேரிடமும் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட இருக்கிறது. பொள்ளாச்சி வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள்; 200 ஆவணங்கள்; 40-க்கும் மேற்பட்ட மின்னணு தரவுகள் இந்த வழக்கில் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. ஆஜராகும் 9 பேரிடமும் தனித்தனியாக இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்காக சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஒன்பது பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இறுதி கட்டத்தை நோக்கி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.