
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த வழக்கைப் பொறுத்த வரைக்கும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9 எதிரிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் 376டி மற்றும் தொடர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 376 இன் கீழ் 2 என் ஆகிய மேஜர் பிரிவுகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதர சட்டப்பிரிவுகளுக்கு 10 ஆண்டுகள், 7 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் என தனித்தனியாகத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச தண்டனையாக ஒன்பது எதிரிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் ரூபாய் நீதிமன்றம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட்ட தீர்ப்பு. சி.பி.ஐ.யின் முயற்சி, எங்களுடைய முயற்சி வீண் போகவில்லை. நல்லபடியாகச் சாட்சிகள் பரிமாறிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் நல்ல முறையில் பரிசீலித்து நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது இந்த மாதிரி வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களோட கண்ணியம், வழக்கின் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கான இழப்பீட்டை மாவட்ட சட்டப் பணிகள் குழு மூலம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருத்தருக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் என்ற வகையில் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது 376 சட்டப்பிரிவுக்கும் உண்டு, 376டி என்ற சட்டப்பிரிவுக்கும் உண்டு. இறுதி வாதத்தை பொறுத்தவரைக்கும் சாட்சி விசாரணைகள், தாக்கல் செய்த ஆவணங்கள், சான்று பொருட்கள் அடிப்படையில் வாதங்களை முன் வைத்தோம். இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் வாய்மொழி சாட்சிகள் மற்றும் மின்னணு சாட்சிகள் இரண்டையும் வந்து சமமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். விசாரணையின் போது சேகரித்து ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அபராத தொகை ஒவ்வொருத்தருக்கும் வந்து 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரைக்கும் ஒவ்வொரு எதிரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 6 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் தான் இருக்கிறார்கள். 376டி மற்றும் 376 2 என் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சென்று சேரும்.

இந்த வழக்கின் தன்மைகள், பாதிக்கப்பட்ட பெண்களுடைய சாட்சியங்கள், எல்லாவற்றையும் பரிசீலித்துத் தான் இதனை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால் சாட்சிகள் நல்ல முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் நல்ல முறையில் பரிசீலனை செய்துள்ளது. இந்த வழக்கைப் பொறுத்த வரைக்கும் சிபிஐ தரப்பில் நல்ல முறையில் விசாரணை செய்து நல்ல முறையில் வாதங்களை சமர்ப்பித்துள்ளனர். சாட்சிகள் நல்ல முறையில் உள்ளது. மேல் முறையீடு சென்றாலும் இந்த வழக்கில் தண்டனை நிலை நிறுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் வந்து இந்த சட்டப் பிரிவுகளில் கீழ் 2 விதமான தண்டனைதான் வழங்க முடியும் ஒன்று சாகும் வரைமுறை ஆயுள். அல்லது குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை. இந்த வழக்கோட தன்மை, பாதிக்கப்பட்ட பெண்களோட சூழல் எல்லாவற்றையும் அடிப்படையாக வைத்துத்தான் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டடுள்ளது. மொத்தமா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 9 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாய்மொழி சாட்சிகள், அதோடு மின்னணு சாட்சிகளும் மற்ற சாட்சிகளும் இந்த வழக்கில் முக்கியமான ஒரு அம்சமாக உள்ளது.

முதல் குற்றவாளிக்கு (A1) சபரிராஜனுக்கு மொத்தம் 4 ஆயுள் தண்டனைகள், எதிரி 2 திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள். எதிரி 3 சதீஷூக்கு 3 ஆயுள் தண்டனைகள், எதிரி 4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை. எதிரி 5 மணி என்கிற மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை, எதிரி 6 பாபுக்கு ஒரு ஆயுள் தண்டனை. எதிரி ஏழு ஹரானிமஸ் பாலுக்கு 3 ஆயுள் தண்டனை, எதிரி 8 அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, எதிரி 9 அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை” எனத் தெரிவித்தார்.