சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை காரணமாக மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வடைந்துள்ளது. குமரி தோவாளை பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு மலர் சந்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் ராயக்கோட்டை, மதுரை, ஓசூர், திண்டுக்கல் என பல்வேறு வெளியூர் பகுதிகளில் இருந்தும், ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை உள்ளிட்ட உள்ளூர்ப் பகுதிகளில் இருந்தும் சுமார் 200 டன் பூக்கள் இந்த சிறப்பு மலர் சந்தைக்கு வந்துள்ளது.
ஒரு கிலோ பிச்சிப்பூ 800 ரூபாயில் இருந்து 1100 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ கிலோ 1,000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்கும், ரோஜா பூ ரூபாய் 250 லிருந்து 300 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.