
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியில் வசிப்பவர் சென்னன் மகன் இன்பராஜ். சில வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணமான நிலையில் இவருக்கு விஷ்வா (8) பவீன் (6) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் இன்பராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசுமை நகர் பகுதியில் தான் கட்டிய வீட்டின் மீது பாரத ஸ்டேட் வங்கியில் 24 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் 18 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய இன்பராஜ் பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் அந்தக் கடனை அடைத்து விட்டு கூடுதலாக 6 லட்சம் ரூபாய் பணத்தை பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கியதால் கடன் தொகை 24 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் கடன் தொகை அதிகமாகி வருவதை விரும்பாத இன்பராஜ் மன உளைச்சலுக்கு ஆளாகி அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களிடம் செத்துப் போகிறேன் என்று புலம்பி உள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பணி முடித்துவிட்டு காலை வீட்டிற்கு வந்த இன்பராஜ் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததால் ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் குழந்தைக்கு கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.