சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதில் அதிகமானோர் வாழ வேண்டிய இளைஞர்கள். அதனால் அடிக்கடி விபத்து நடக்கும் சாலை ஓரங்களில் எச்சரிக்கை பதாகை வைத்தும் வாகன ஓட்டிகள் அதை கவனிப்பதில்லை அதனால் அதே இடங்களில் அடுத்தடுத்து பல விபத்துகள் ஏற்படுகிறது.
இந்தநிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் புதிய யுத்தியை கையாண்டுள்ளார். இந்த புதிய யுத்தி வாகன ஓட்டிகளை சிந்திக்க வைத்துள்ளதுடன் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அது என்ன புதிய யுக்தி.. கறம்பக்குடி காவல்நிலைய எல்லையில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 33 சாலை விபத்துகள் இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த இடங்களில் எச்சரிக்கை பதாகை வைத்த பிறகும் அதைக் கவனிக்காமல் விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் விபத்து நடந்த சாலையில் அந்த குறிப்பிட்ட இடத்தை வட்டமிட்டு காட்டி விபத்து பகுதி என்று எழுதியதுடன் அந்த இடங்களில் விபத்தில் காயம் ஏற்படுத்தியமைக்கான சட்டப் பிரிவு 337, கவனக் குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதலுக்கான சட்டப்பிரிவு 279 விபத்தில் உயிரிழந்தால் அதற்கான சட்டப் பிரிவு 304(ஏ) ஆகிய சட்ட பிரிவு எண்களை சாலையில் விபத்து நடந்த இடங்களில் எழுதியுள்ளதால் வாகன ஓட்டிகளின் கவனம் அங்கு செல்கிறது.
அந்த பகுதியை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தானா வேகத்தை குறைத்து செல்கிறார்கள். அதனால் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. உதவி ஆய்வாளர் சரவணனின் இந்த முயற்சியை காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.