



சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், ‘ஆப்ரேஷன் ஸ்மைல் திட்டம்’ இன்று (02 பிப்.) தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இந்நிகழ்ச்சியானது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் இ.கா.ப - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு (பொறுப்பு), லால்வீனா இ.ஆ.ப - சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை ஆணையாளர், H. ஜெயலட்சுமி - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சென்னை பெருநகரங்களில் பிச்சையெடுக்கும் குழந்தைகள், பராரியாக சுற்றித்திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், பாதுக்காப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள், கல்வி தேவைப்படும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்படும் குழந்தைகள், ஆபத்தை விளைவிக்கும் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் போன்று அனைத்து தரப்பட்ட குழந்தைகளை எங்கு பார்த்தாலும், அவர்களை அந்த சூழலிலிருந்து விடுவித்து அவர்களுக்குத் தேவையன மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்து சீர்திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.