திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சண்முகலட்சுமி. இவர் காவல் பணியோடு சேர்த்து சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் அப்பகுதியில் ஆதரவு இல்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அப்பகுதியில் செயல்படும் காப்பகத்தில் சேர்த்துவிட்டு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஜல்லிபட்டியில் செயல்படும் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் 300 பேருக்கு இனிப்பு மற்றும் அறுசுவை அசைவ பிரியாணி உணவுகளை ஆய்வாளர் சண்முகலட்சுமி வழங்கினார். மேலும் தன் முயற்சியால் காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார். தீபாவளி பண்டிகை அன்று முழு நேர பாதுகாப்பு பணியிலிருந்து விட்டு பின்னர் தனது குடும்பத்தினரை கூட சந்திக்க செல்லாமல் காப்பகத்திற்கு வந்து, அங்கு தங்கி இருந்தவர்களை மகிழ்வித்த ஆய்வாளர் சண்முக லட்சுமியை பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள்.