Skip to main content

மகனை கண்டுபிடிக்க அம்மாவை டார்ச்சர் செய்த எஸ்ஐ; ஆயுதப்படைக்கு அதிரடி இடமாற்றம்!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

police incident in salem

 

சேலத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு தலைமறைவான மகனை கண்டுபிடிப்பதற்காக, அவருடைய தாயாரை விசாரணையின்போது  டார்ச்சர் செய்த போலீஸ் எஸ்ஐ., அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி சம்பூர்ணம் (44). இவர்களுடைய மகன் அஜித்குமார் (23). கடந்த சில ஆண்டுக்கு முன்பு ராஜா இறந்து விட்டார். அஜித்குமார், செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பார்சல் சேவை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

 

அவர், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத மைனர் பெண்ணை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கு தெரிந்ததை அடுத்து, காதல் தம்பதி தலைமறைவானது.

 

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர், அஜித்குமாரின் தாயாரை பிடித்துச்சென்று விசாரித்தனர். மகன் இருக்கும் இடத்தைச் சொல்லுமாறு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. மகனை காவல்நிலையத்தில் ஒப்படைக்காவிட்டால் கைது செய்வதாகவும் மிரட்டியுள்ளனர்.

 

இதனால் அவமானம் அடைந்த சம்பூர்ணம், மார்ச் 26ம் தேதி இரவு விஷம் குடித்தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

 

இது ஒருபுறம் இருக்கு, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று அடித்து கொடுமைப்படுத்தியதால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் கிளப்பினர். இதற்குக் காரணமான காவல்துறை எஸ்ஐயை கைது செய்யக்கோரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் நடத்தினர். இது தொடர்பாக ஆணையர் சந்தோஷ்குமாரிடம் புகாரும் அளித்தனர்.

 

விசாரணையில், சம்பூர்ணத்தை செவ்வாய்பேட்டை எஸ்ஐ ராஜா என்பவர் விசாரணையின்போது மன உளைச்சல் ஏற்படும் வகையில் மிரட்டியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சேலம் மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்