நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் 5ஆம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவானது, பீகார்(5), ஜார்க்கண்ட்(3), ஒடிசா(5), மேற்கு வங்காளம்(7), ஜம்மு - காஷ்மீர்(1), மகாராஷ்டிரா(13), உத்தரப் பிரதேசம் (14), லடாக் என மொத்தம் 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (18-05-24) மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கும், மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிக்கும் நாளை மறுநாள் (20-05-24) தேர்தல் நடைபெறவுள்ளது. அதே போல், அன்று நடைபெறும் தேர்தலில், மும்பை வடக்கு தொகுதியில் பியூஷ் கோயல், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணி, உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐந்தாம் கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.