மதுரையில் வைகை ஆற்று மணலை திருடும் கும்பலிடம் பேரம் பேசி, ஆபாசமான வார்த்தைகளை சொல்லி சண்டையிட்டு கொள்ளும் காவல்துறையினரின் வீடியோ காட்சிகள் சமூகவளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மதுரை மாவட்டம், வைகை ஆற்றுப் பகுதியில் ஒரு கும்பல் மாட்டு வண்டிகள் மூலமாக மணலை திருடி விற்பனை செய்து வந்துள்ளது. இதனை அறிந்த மதுரை அண்ணாநகர் காவல் நிலைய காவலர் ராம்குமார் மணல் திருட்டு கும்பலிடம் அவ்வப்போது லஞ்சம் வாங்கிக் கொண்டு மணல் திருட்டை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இதனை அறிந்த மதிச்சியம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரன், மணல் திருடி கொண்டிருந்த கும்பலிடம் சென்று, ஒரு மாட்டு வண்டிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் தனக்கும் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் காவலர் ராம்குமாருக்கு ஏற்கனவே பணம் தந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இது காவலர் ராம்குமாருக்கு தெரியவே, சம்பவ இடத்திற்கு வந்த காவலர் ராம்குமாரும், சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரனும் பணம் பெறுவது தொடர்பாக ஆபாசமாக பேசி சண்டையிட்டு கொண்டனர். அப்போது,
காவலர் ராம்குமார்: எல்லா வற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது. பொறுத்து போவதற்கும் ஒரு அளவு உண்டு.
ஆய்வாளர் பிரேம் சந்திரன்: எப்போது பார்த்தாலும் ராம்குமார் மணல் எடுக்கிறார் என்கின்றனர்.
ராம்குமார்: இஞ்சினியர்கள் தான் மணல் எடுத்தார்கள். நான் மணலை எடுத்துச் சென்றேனா? நான் மணலை எடுத்து வீடு கட்டுகிறேனா? நீங்க 2 வண்டி புடிச்சிங்க..
பிரேம் சந்திரன்: உங்க அப்பா கூட வேலை பார்த்தவன் நான்.
ராம்குமார்; எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குன்னே.. என்னிடம் நீங்கள் ரூ.5000 பணம் கேட்டீர்கள். அதற்கான ஆதாரம் உள்ளது. சும்மா தினமும் வந்து 1000 தா, 2000 தா என பணம் கேட்கிறீர்கள், போலீஸ்காரனிடமே பணம் கேட்டு தொந்தரவு செய்றீங்க.
பிரேம் சந்திரன்: விஏஓ பேசியதையே நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.
ராம்குமார்: விஏஓவும் பணம் வாங்கி இருக்கிறார், விஏஓக்கு பணம் கொடுத்துருக்காங்க.
பிரேம் சந்திரன்: நீங்களே பணம் வாங்கி கொண்டிருந்தால் நான் என்ன செய்வது?
ராம்குமார்: பார்த்து மரியாதையாக பேசுங்கள்..
இதன் பின் இருவரும் தொடர்ந்து மாறி மாறி ஆபாச வார்த்தைகளால் திட்டி கொள்கின்றனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் வழியே காவலர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ பரவி வைரலாவதை அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரன், காவலர் ராம்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வீடியோ குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.